

ராணுவ தின கொண்டாட்டம்
நாடு விடுதலை அடைந்த பிறகு இந்திய ராணுவத்தின் தலைமைத்தளபதியாக பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி பதவி ஏற்றார். இந்த நாள் இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.
வழக்கம்போல இந்த ராணுவ தினம், டெல்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ராணுவ அணிவகுப்பு, வீர சாகங்கள் நடைபெற்றன.வீரச்செயல்களைப் புரிந்தோர்களுக்கு ராணுவ தளபதி எம்.எம்.நரவனே விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
சவால்
இந்த விழாவில் பேசும்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஓராண்டு காலம் நமக்கெல்லாம் மிகவும் சவாலானது. நமது வடக்கு எல்லையில் சீனாவுடனான நிலைமை உங்களுக்கு தெரியும். நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்கு 14-வது ராணுவ தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது.
பல்வேறு மட்டங்களில் கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டதின் காரணமாக, பல பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. இது ஒரு நேர்மறை வளர்ச்சி ஆகும். பரஸ்பர மற்றும் சம பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையை தீர்க்க நமது முயற்சிகள் தொடரும்.
எல்லையை மாற்ற...
எல்லையில் உள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் முயற்சிகளை இந்திய ராணுவம் அனுமதிக்காது.நாட்டின் பொறுமை, அதன் உள்ளார்ந்த பலத்தால் தாங்கப்பட்டுள்ளது. அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
(பாகிஸ்தான்) எல்லைக்கு அப்பாற்பட்ட பயிற்சி முகாம்களில் இருந்து சுமார் 300-400 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ வாய்ப்புக்காக காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் வலுவான ஊடுருவல் தடுப்பு கட்டமைப்பால் பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களைக் கடத்த எல்லை தாண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னேற்றம்
கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீரின் உள்பகுதிகளில் கள நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து ஆதரிக்கப்படுகிற பயங்கரவாத அமைப்புகள், வளர்ச்சி செயல்முறையை நிறுத்த முயற்சிக்கின்றன. உள்ளூர் அல்லாதவர்கள் மற்றும் ஏழைத்தொழிலாளர்களை குறிவைப்பது இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். ஆனால் பாதுகாப்புப்படையினரின் தொடர் முயற்சியால் வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.