அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமான பாகங்கள் அகற்றும் பணி தொடக்கம்

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களை அப்புறப்படுத்தும் பணி போலீசார் தொடங் கியது.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் விமான பாகங்கள் அகற்றும் பணி தொடக்கம்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் கடந்த 12-ந் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகரில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் இருந்த 38 பேர் என 279 மரணம் அடைந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார். இதுவரை 232 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதால், விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பணியகம், விரிவான விசாரணையை தொடங்கி உள்ளது. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

விமானத்தின் சேதம் அடைந்த வால் மற்றும் இறக்கை பகுதிகள் உள்பட மற்ற விபத்தில் எரிந்த உதிரி பாகங்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்தன. விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் தொடர்ந்து தடயங்களை தேடி வந்தனர். மேலும் பரிசோதனைக்காக இந்த சேதம் அடைந்த பாகங்களை குஜராத் போலீசார் இங்குள்ள விமான நிலைய வளாகத்துக்கு மாற்ற தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில விமான போக்குவரத்து உள்கட்டமைப்பு கட்டிடத்துக்கு சேதமடைந்த உதிரி பாகங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ஜெய்பால்சிங் ரத்தோர் கூறும்போது, ''விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் சேதமடைந்த பாகங்களை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளோம். சேதமடைந்த பாகங்களை மாற்ற 3 நாட்களாகும். விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் விமான விபத்து புலனாய்வு பணியக கட்டுப்பாட்டில் இந்த சேதமடைந்த பாகங்கள் இருக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com