அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கும் பணி; கடற்படை துணை தளபதி அறிவிப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களையும் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளோம் என கடற்படை துணை தளபதி அறிவித்து உள்ளார்.
அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கும் பணி; கடற்படை துணை தளபதி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

எனினும், அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10% ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்னிவீரர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த 10% இடஒதுக்கீடானது, இந்திய கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு நிலைகள் மற்றும் அனைத்து 16 வகையான பாதுகாப்பு பொது துறை பணிகளிலும் அமல்படுத்தப்படும். தற்போது பாதுகாப்பு படையினருக்கு நடைமுறையில் இருக்கும் ஒதுக்கீட்டுடன் கூடுதலாக இந்த இடஒதுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவைகளை அமல்படுத்துவதற்காக, தொடர்புடைய ஆள்சேர்ப்பு விதிகளில் வேண்டிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்து உள்ளது. தேவையான வயது தளர்வு பிரிவும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அக்னிபத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு பற்றி பாதுகாப்பு அமைச்சகம் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில் கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, இந்த ஆண்டு நவம்பர் 21ந்தேதியில் இருந்து கடற்படையின் முதல் அக்னிவீரர்கள் குழுவானது, ஒடிசாவில் உள்ள ஐ.என்.எஸ். சில்காவில் பயிற்சிகளை தொடங்குவார்கள் என கூறியுள்ளார்.

இதற்காக ஆண் மற்றும் பெண் அக்னிவீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவின் பல்வேறு கடற்படை கப்பல்களில் 30 பெண் அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களையும் பணியில் அமர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் போர் கப்பல்களிலும் பணியமர்த்தப்படுவார்கள் என திரிபாதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com