மனைவி, மகனை எரித்துவிட்டு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்

ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
மனைவி, மகனை எரித்துவிட்டு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிந்து (43). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் வெளிநாட்டில் உள்ளார். 2-வது மகன் அமல் (17) பிளஸ்-2 படித்து வருகிறார். ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனைவி பிந்து, குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். அதன்பின்பு கடந்த 8 மாதங்களாக ராஜேந்திரன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் பிந்து தனது மகன், மகளை அழைத்துக் கொண்டு தங்களது உடமைகளை எடுப்பதற்காக ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்தார். மகள் வீட்டுக்கு வெளியே நின்றார். பிந்துவும் மகன் அமலும் வீட்டிற்குள் சென்றனர். அவர்களிடம் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜேந்திரன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவி, மகன் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். அத்துடன் பெட்ரோலை தன் மீதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ எரிந்த வேகத்தில் பிந்துவும் அவரது மகனும் அலறி அடித்துகொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் கீழே விழுந்து உருண்டு புரண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாரிப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தீக்குளித்த ராஜேந்திரன் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆயிரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாரிப்பள்ளி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடும்ப தகராறில் மனைவி, மகனை எரித்து விட்டு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com