சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவு - அமித்ஷா பெருமிதம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும், மாநிலத்தில் எங்குமே தற்போது கட்டுப்பாடுகள் இல்லை எனவும் அமித்ஷா பெருமிதத்துடன் கூறினார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவு - அமித்ஷா பெருமிதம்
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதை முன்னிட்டு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது அங்கே கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டு இருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக தலைவர்கள் அனைவரும் 7 நாட்கள் கூடினர். அதில் ஒரு தலைவர் கூட காஷ்மீர் விவகாரத்தை எழுப்பவில்லை. இதன் மூலம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை அவர்கள் ஆதரித்து உள்ளனர். இது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி ஆகும்.

காஷ்மீரை பல ஆண்டுகளாக பீடித்துள்ள பயங்கரவாதத்துக்கு 41,800 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர். ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மனைவியர் விதவையாகி இருக்கின்றனர். பிள்ளைகள் அனாதைகளாகி இருக்கின்றனர். இந்த மனித உரிமை மீறல் குறித்து யாரும் பேசுவதில்லை.

ஆனால் சில நாட்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதை மனித உரிமை மீறல் என சிலர் (எதிர்க்கட்சிகள்) கூறுகின்றனர். இது மனித உரிமை மீறல் இல்லை. அங்கு கடந்த 2 மாதங்களாக 10 ஆயிரம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 6 ஆயிரம் பொது தொலைபேசி இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

காஷ்மீரில் தற்போது எங்கே கட்டுப்பாடுகள் இருக்கின்றன? உங்கள் மனதில்தான் இருக்கிறது. அங்கு எங்கேயும் கட்டுப்பாடுகள் இல்லை. அங்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக வெறும் பொய் தகவல்கள் மட்டுமே பரப்பப்படுகின்றன.

காஷ்மீரில் மொத்தமுள்ள 196 போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. வெறும் 8 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து) ரத்து செய்யப்பட்டு உள்ளதால் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மேலும் வலுவடையும். பிரதமர் மோடியின் இந்த உறுதியான நடவடிக்கையால் காஷ்மீர் மாநிலம் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நாட்டிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com