உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது: பிரதமர் மோடி-ஜின்பிங் பேச்சு

இன்று தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் காணொலி வாயிலான மாநாட்டில் மோடி, ஜின்பிங் இன்று பேசுகிறார்கள்.
உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்குகிறது: பிரதமர் மோடி-ஜின்பிங் பேச்சு
Published on

புதுடெல்லி,

உலக பொருளாதார கூட்டமைப்பு, ஆண்டுதோறும் தனது மாநாட்டை சுவிஸ் நாட்டில் உள்ள பனிச்சறுக்கு நகரான டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இந்த மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு இம்மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், காணொலி வாயிலாக 5 நாள் மாநாட்டுக்கு உலக பொருளாதார கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. டாவோஸ் செயல்திட்ட மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புரையுடன் இன்று (திங்கட்கிழமை) மாநாடு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 2 அமர்வுகள் நடக்கின்றன. முதல் அமர்வு, கொரோனா தொடர்பாகவும், 2-வது அமர்வு தொழில் புரட்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றியும் நடக்கிறது. பிரதமர் மோடி இன்று மாலை மாநாட்டில் காணொலி வாயிலாக பேசுகிறார். உலகத்தின் நிலை என்ற தலைப்பில் அவர் பேசுகிறார். அவருக்கு பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் பேசுகிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட், ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ ஆகியோர் பேசுகிறார்கள். அதன்பிறகு நடக்கும் சிறப்பு அமர்வுகளில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதனம் ஜிப்ரியசஸ், சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனம்வாலா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

19-ந் தேதி, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் பேசுகிறார். 20-ந் தேதி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர் பேசுகிறார்கள். கடைசி நாளான 21-ந் தேதி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், நைஜீரிய துணை அதிபர் யேமி ஒசின்பஜோ ஆகியோர் பேசுகிறார்கள். 2022-ம் ஆண்டில் தங்களது தொலைநோக்கு பார்வை குறித்து உலக தலைவர்கள் பகிர்ந்து கொள்ளும் முதல் மேடையாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com