

புதுடெல்லி,
சமஸ்கிருத மொழியின் சிறப்பைப் போற்றவும், அதை பாதுகாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் உலக சமஸ்கிருத தினம் (World Sanskrit Day) கொண்டாடப்படுகிறது. இந்து மத நாள்காட்டியின்படி, ஷ்ரவண மாதத்தில் வரும் பவுர்ணமி(ஸ்ரவண பூர்ணிமா/ ரக்ஷா பந்தன் நாள்) அன்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் உலக சமஸ்கிருத தினமாக கொண்டாடப்படுவதையொட்டி பிரதனர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். இன்று, ஷ்ரவண பவுர்ணமி நாளில், சமஸ்கிருதத்தின் அழியாத சிறப்பையும், செழிப்பையும் நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவின் அறிவு, சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை தொடர்ந்து கடத்தி வந்த மொழியாக இது திகழ்கிறது. பல துறைகளில் இன்றும் இதன் ஆக்கபூர்வமான தாக்கத்தைக் காண முடிகிறது.
இந்த சிறப்பான நாளில், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் சமஸ்கிருதத்தைக் கற்பவர்களையும், கற்பிப்பவர்களையும், அத்துடன் அதில் அடங்கியுள்ள காலத்தால் அழியாத பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கப் பாடுபடுபவர்களையும் நாம் பாராட்டுகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.