உலக வனவிலங்கு தினம்: குஜராத் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி லயன் சஃபாரி

குஜராத் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி லயன் சஃபாரி செய்தார்.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று குஜராத் வந்தடைந்தார். தொடர்ந்து ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். வந்தாரா விலங்குகள் மையம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 43 இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.
அதன்பின், நேற்று இரவு பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சாசனில் உள்ள மாநில வனத்துறையால் நிர்வகிக்கப்படும் வன விருந்தினர் மாளிகையான சின் சதனில் தங்கி ஓய்வு எடுத்தார்.
இந்தநிலையில், வனவிலங்கு தினத்தையொட்டி இன்று காலை சின் சதனில் இருந்து, பிரதமர் மோடி மற்றும் வனத்துறை மூத்த அதிகாரிகளுடன் லயன் சஃபாரி மேற்கொண்டார். அப்போது எந்தவித பாதுகாப்பு கவசம் இன்றி பயணம் செய்தார். லயன் சஃபாரி செய்த பிறகு தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்தில் பங்கேற்கிறார். லயன் சஃபாரியின்போது எடுத்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
லயன் சஃபாரி குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
இன்று காலை, #WorldWildlifeDay உலக வனவிலங்கு தினத்தையொட்டி கம்பீரமான ஆசிய சிங்கங்களின் தாயகமான கிர் வனப்பகுதியில் ஒரு சஃபாரி சென்றேன். கிர் வனப்பகுதிக்கு வருவது, நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது நாங்கள் கூட்டாகச் செய்த பணியின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக, கூட்டு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதை உறுதி செய்துள்ளன. ஆசிய சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடி சமூகங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்கும் பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.
கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்காக லயன் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2,900 கோடிக்கு மேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






