

புதுடெல்லி,
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. 8-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டே நடத்தியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2027-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன்மூலம் அறிவிக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று (01.04.2026) தொடங்குகிறது. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, டிவி, இருசக்கர வாகனம், கணினி உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை எத்தனை உள்ளது என்பது உள்ளிட்ட 33 கேள்விகள் இதில் கேட்கப்படும்.
நாடு முழுவதும் இந்த முறை டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால், மாநிலம் வாரியாக, சுய விபர பதிவு மற்றும் கணக்கெடுப்பாளர் வீடு தேடி வரும் தேதிகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆக., 1 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 முதல் 31ம் தேதி வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 முதல் 30ம் தேதி வரையிலும் நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, மொபைல் செயலி மூலம் நேரடியாக தரவுகளைச் சேகரித்துச் சமர்ப்பிப்பார்கள். சுய கணக்கெடுப்பு முறையானது, கணக்கெடுப்பாளர் வருவதற்கு முன்பு, ஒருவர் தனது சொந்த வசதிக்கேற்ப தகவல்களை நிரப்புவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பைத் தொடர்ந்தாலும், இந்த புதியமுறை பதிலளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கூடுதல் வசதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் சுய விபரங்களை பதிவு செய்வோருக்கு, 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பாளர், வீட்டிற்கு நேரில் வரும்போது, இந்த 16 இலக்க எண்ணை அவர்களிடம் வழங்கினால் போதும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என, வேறு எந்த ஆவணங்களையும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்கள் அனைத்தும் மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படுகிறது.
இந்த பிரமாண்ட பணி இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள், பின் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது என்றும், சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், 'என்கிரிப்ட்' செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும் என்றும் நாட்டின் பதிவாளர் ஜெனரலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருதுஞ்சய் குமார் நாராயண் தெரிவித்திருந்தார்.