குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வணிக கட்டிடம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

வைர வியாபாரிகள் ஒரே இடத்தில் செயல்படும் விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய வணிக கட்டிடம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

காந்திநகர்,

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மிகப்பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. சூரத் வைர நகரில், 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுரஅடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3,400 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன. சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com