உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது

விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் 2-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. துறைமுக வளாகத்தில் நடந்த பிரமாண்டமான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த துறைமுக பணி ஆரம்பிக்கப்பட்ட போது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை சமாளித்த கேரள அரசு, அங்கு துறைமுகத்தை கொண்டு வருவதில் முனைப்பை காட்டியது. இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சி தான் முக்கியம் என்பதில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு செயல்படுவதாக பெருமையாக பேசினார்.
இதனை தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி. ஐரினா நேற்று காலை 8 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்தது.இந்தியாவில் இந்த கப்பல் நங்கூரமிட்ட முதல் துறைமுகம் விழிஞ்ஞம் ஆகும். எனவே இந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பல், ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தை விட 4 மடங்கு பெரியதாகும். 20 அடி நீளம் கொண்ட 24 ஆயிரத்து 346 கன்டெய்னர்களை இந்த கப்பலில் ஏற்ற முடியும். லைபீரியா கொடியுடன் இந்த கப்பல் பயணிக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாலுமி வில்லி ஆன்றனி கூறுகையில், "எம்.எஸ்.சி. ஐரினா நங்கூரமிடும் இந்தியாவின் முதல் துறைமுகம் விழிஞ்ஞம் ஆகும். 2023-ம் ஆண்டு இந்த கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனா, கொரியா, சிங்கப்பூர் வழியாக தற்போது விழிஞ்ஞம் வந்துள்ளது. 29 ஆண்டுகள் கடல் சார் அனுபவமுள்ள நான் இதுவரை 129 நாடுகளுக்கு பயணித்து உள்ளேன். உலகின் மிகப்பெரிய கப்பலில் விழிஞ்ஞம் துறைமுகம் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்"என்றார்.






