‘வந்தே பாரத்’ ரெயிலில் விற்கப்பட்ட தயிர் பாக்கெட்டில் நெளிந்த புழு... ஒப்பந்தத்தை ரத்து செய்த ரெயில்வே நிர்வாகம்

ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
‘வந்தே பாரத்’ ரெயிலில் விற்கப்பட்ட தயிர் பாக்கெட்டில் நெளிந்த புழு... ஒப்பந்தத்தை ரத்து செய்த ரெயில்வே நிர்வாகம்
Published on

புதுடெல்லி,

கடந்த மார்ச் 15-ந்தேதி, ‘வந்தே பாரத்’ ரெயிலில் பயணித்த ரித்தேஷ் சிங் என்பவருக்கு ரெயிலில் இரவு உணவுடன் சேர்த்து ஒரு தயிர் பாக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாக்கெட்டைத் திறந்தபோது, ​​அதற்குள் உயிருள்ள புழுக்கள் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் ரித்தேஷ் சிங், உடனடியாக தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இது குறித்து வீடியோ பதிவிட்டு, ஐ.ஆர்.சி.டி.சி., ரெயில்வே மந்திரி ஆகியோரை அதில் டேக் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம், சம்பந்தப்பட்ட உணவு விற்பனை நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்தின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று கருதிய ரெயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட உணவு விற்பனை நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி.க்கு அதிரடியாக உத்தரவிட்டது.

மேலும், அந்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சேவை குறைபாடு காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com