யெஸ் வங்கியை உடனே பொதுத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்: வங்கி ஊழியர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்

யெஸ் வங்கியை உடனடியாக பொதுத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யெஸ் வங்கியை உடனே பொதுத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்: வங்கி ஊழியர்கள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்
Published on

ஐதராபாத்,

வாராக் கடன்களால் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 3-ந் தேதி வரை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசால் பாராட்டப்படும் தனியார் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வி அடைந்து வருகிறது. மீண்டும் 1969-ம் ஆண்டு நடவடிக்கையை அறிவிக்க அரசுக்கு இதுவே நல்ல தருணம். அனைத்து தனியார் வங்கிகளும் பொதுத்துறையின் கீழ் (தேசியமயமாக்க) கொண்டுவரப்பட வேண்டும்.

மக்களின் பணம் மக்களின் நலனுக்காகவே, தனியார் கொள்ளையடிக்க அல்ல. மக்கள் பணத்தை வங்கிகள் தவறாக கையாண்டாலோ, தவறாக நிர்வகித்தாலோ (யெஸ் வங்கி உள்பட) அந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுக்கு பொறுப்பானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

யெஸ் வங்கியில் பெருத்த சேதம் அடைந்த பின்னர் ரிசர்வ் வங்கி மிகவும் காலம்கடந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்கள் தங்கள் பணம் குறித்து பீதியடைந்து உள்ளனர். யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டாளர் என்ற முறையில் ரிசர்வ் வங்கியும் தவறுக்கான பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற வங்கி தோல்விகளை தடுக்க ரிசர்வ் வங்கி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிவிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com