விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

ஒட்டு மொத்த உலகமும் இன்று ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
Published on

விசாகப்பட்டினம்,

உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ. நீள நடைபாதையில் மிக பிரமாண்ட யோகா நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, கடந்த ஒரு தசாப்தத்தில், யோகாவின் பயணம் எப்படி உள்ளது? என நான் பார்க்கும்போது, அது பல விசயங்களை எனக்கு நினைவூட்டியது. ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அங்கீகரிக்க வேண்டும் என்று ஐ.நா. பொது சபையில் இந்தியா தீர்மானம் முன்மொழிந்தபோது, குறுகிய நேரத்தில், உலகின் 175 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நின்றன. இன்றைய உலகில் இந்த ஒற்றுமை மற்றும் ஆதரவு என்பது ஒரு இயல்பான சம்பவம் கிடையாது.

ஒட்டு மொத்த உலகமும் இன்று ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் நிலைத்தன்மையற்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற தருணங்களில், யோகா நமக்கு அமைதிக்கான வழியை தருகிறது என்று அவர் பேசியுள்ளார்.

நம்முடைய மாற்றுத்திறனாளி நண்பர்களும் பிரெய்லி உதவியுடன் யோக சாஸ்திரங்களை படிக்கின்றனர் என தெரிந்ததும் நான் பெருமையடைந்தேன். விண்வெளியில் விஞ்ஞானிகளும், யோகா ஒலிம்பியாட்டின்போது கிராமங்களில் இளைய நண்பர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓபரா ஹவுஸ், எவரெஸ்ட் சிகரம் அல்லது கடல் பகுதிகள் என எல்லா இடங்களிலும் இதே செய்தி நமக்கு கிடைக்கிறது. எல்லைகள் கடந்து அனைவருக்கும் தேவையான ஒன்றாக யோகா உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com