யுபிஐ வழியாகவே பிஎப் பணம் எடுக்கலாம்: சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்

வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் பிஎப் தொகையை ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
டெல்லி,
‘யு.பி.ஐ.’ மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை அவசர தேவைக்கு எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறும் வசதி உள்ளது. இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் தங்களுடைய தொகையை ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ‘யு.பி.ஐ.’ மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, ‘யு.பி.ஐ.’ ‘பின்’ பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.இந்த பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.






