டிரம்ப்பிடம் நாட்டை விற்று விட்டீர்கள்: பிரதமர் மோடி மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியாவை சீர்குலைக்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை அந்நிய சக்திகள் கட்டுப்படுத்துகின்றன என அவர்கள் பேசுகிறார்கள்.
அபிஜீத் திப்கே
Published on: 

கொச்சி

டிரம்ப்பிடம் நாட்டை விற்று விட்டீர்கள் என்று பிரதமர் மோடி மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தடை

இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பிலும் மும்பை மற்றும் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு வெளியிட்டார்.

கொச்சியில் போராட்டம்

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கேரளாவின் கொச்சி நகரில், 7-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது. ஜனநாயகம் பாதுகாப்போம், எஸ்.ஐ.ஆரை ரத்து செய்க. எங்களுடன் கொச்சி ராஜேந்திர திடலில், 7-ந்தேதி மாலை 4 மணியளவில் இணைந்து கொள்ளுங்கள் என அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

திப்கே பங்கேற்பு

‘கொச்சியில் ஜந்தர் மந்தர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் அபிஜீத் திப்கே கலந்து கொண்டார். அவருடன் அக்கட்சியின் தெற்கு மண்டல தலைவர் விஜய் மல்லாங்கி மற்றும் தேசிய செயலாளர் ஆப்ரீன் நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்ட பின்னர், அந்த கட்சியின் தலைவர்களான திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் மீண்டும் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களில் திப்கே விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த கட்சியின் முதல் நகர்வாக இது பார்க்கப்பட்டது.

மூவர்ணக்கொடி

இந்த போராட்டத்தில் திப்கே பேசும்போது, மூவர்ணக்கொடியை ஏற்றியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். என் சகோதரர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவில் கடைசியாக இதுபோன்று ஆங்கிலேயர் ஆட்சியில்தான் நடந்தது.

பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், எல்லா இடங்களுக்கும் இந்த மூவர்ணக்கொடியை ஏந்தி செல்வேன். டெல்லியிலோ, மராட்டியத்திலோ, கேரளத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ நீங்கள் என்னை கைது செய்ய விரும்பினால், கைது செய்யுங்கள். ஆனால், நான் இந்த மூவர்ணக்கொடியை மீண்டும் வந்து ஏந்துவேன் என கூறினார்.

அந்நிய சக்திகள்

தொடர்ந்து அபிஜீத் திப்கே பேசும்போது, டிரம்ப்பிடம் இந்த நாட்டை விற்று விட்டீர்கள் என்று பிரதமர் மோடி மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். அவர் கூறும்போது, இந்தியாவை சீர்குலைக்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை அந்நிய சக்திகள் கட்டுப்படுத்துகின்றன என அவர்கள் பேசுகிறார்கள்.

டிரம்ப்பிடம் சரண் அடைந்தது யார்? என்று பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன்.. டிரம்புக்காக ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது யார்? இந்தியா 18 சதவீத வரியை எதிர்கொள்ளும், பதிலுக்கு இந்தியா தரப்பில் 0 சதவீத வரி என்ற ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது யார்? என கேள்வி எழுப்பிய அவர், நீங்கள்தான் இந்த நாட்டை விற்று விட்டீர்கள். நாங்கள் இல்லை. டிரம்ப்பிடம் இந்த நாட்டை நீங்கள்தான் விற்று விட்டீர்கள். நாங்கள் விற்கவில்லை என்று பேசினார்.

X