

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தீபக் சர்மா. இவரது மனைவியின் தாயார் ஊர்மிளா தேவி அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோண்டா மாவட்டத்தில் உள்ள உம்ரி என்ற கிராமத்திற்கு தீபக் சர்மா சென்றார்.
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு ஊர்மிளா தேவியின் சடலத்தை எரிப்பதற்காக ஆற்றங்கரை அருகே உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களோடு தீபக் சர்மாவும் சென்றிருந்தார். இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் ஆற்றில் இறங்கி குளிப்பதற்காக தீபக் சர்மா சென்றபோது, அங்கிருந்த கிராம மக்கள் அவரை எச்சரித்ததாக தெரிகிறது.
இருப்பினும் தீபக் சர்மா ஆற்றில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளார். அப்போது திடீரென நீருக்குள் இருந்து வந்த முதலை ஒன்று தீபக் சர்மாவை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீபக் சர்மாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து லக்னோவில் இருந்து மாநில மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. மாமியாரின் இறுதிச் சடங்கிற்காக ஊருக்கு வந்தவரை முதலை கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.