வடமாநில வாலிபர் அடித்துக்கொலை: ரெயிலில் தப்பிய 2 தொழிலாளர்களுக்கு வலைவீச்சு

படுகொலை தொடர்பாக கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் போலீசில் புகார் அளித்தார்.
வடமாநில வாலிபர் அடித்துக்கொலை: ரெயிலில் தப்பிய 2 தொழிலாளர்களுக்கு வலைவீச்சு
Published on

கோட்டக்குப்பம்,

கோட்டக்குப்பத்தில் வடமாநில வாலிபரை அடித்துக்கொலை செய்துவிட்டு ரெயிலில் மேற்கு வங்காளத்துக்கு தப்பிச்சென்ற 2 தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாலிபர் கொலை

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் அறையில் வட மாநில வாலிபர் ஒருவர் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணை

இந்த படுகொலை தொடர்பாக கோட்டக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான வாலிபர் யார், அவரை கொலை செய்தவர்கள் யார்? என்று விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக, கட்டிடத்தின் உரிமையாளர் முத்து மற்றும் அங்கு தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுத்த முபாரக் என்பவரிடம் விசாரிக்கப்பட்டது. இதில் கொலையானவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் ஜனா மகன் பிரகாஷ்ஜனா (வயது 33) என்பதும், கடந்த 4-ந்தேதி இந்த அறைக்கு வந்து தங்கி இருந்ததும் தெரியவந்தது.

தகராறு

நேற்று முன்தினம் அதிகாலை பிரகாஷ் ஜனாவுக்கும், ஏற்கனவே அந்த அறையில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த ரோகித் சிங், சோட்டா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் 2 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் இறந்துபோனார். இதனால் பதற்றம் அடைந்த 2 பேரும் அவரை, அறையில் படுக்க வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

ரோகித் சிங், சோட்டா இருவரும் சென்னை சென்று, அங்கிருந்து ரெயில் மூலம் மேற்கு வங்காளத்துக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்து விசாரித்தால்தான் பிரகாஷ் ஜனா எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.

உறவினர்கள் கைவிரிப்பு

இந்தநிலையில் பிரகாஷ் ஜனா கொலை செய்யப்பட்டது குறித்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் தாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்றும், அவ்வளவு தூரம் வந்து உடலை வாங்கிச்செல்ல போதிய பொருளாதார வசதி இல்லை என்றும் கைவிரித்து விட்டனர்.

உறவினர்கள் வந்து உடலை அடையாளம் காட்டினால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்பதால், அவர்களை கோட்டக்குப்பம் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com