

மும்பை,
மராட்டிய மாநிலம் பத்னேரா-அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், இளைஞர் ஒருவர் பெண் பயணிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை அங்கிருந்த சக பயணிகள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இந்நிலையில், பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்த இளம்பெண், தன்னிடம் இருந்த மேக்கப் பொருட்களை எடுத்து அந்த இளைஞரின் முகத்தில் போட்டுவிட்டார். அவரது முகத்தில் லிப்ஸ்டிக் போட்டதோடு, கைகளில் வளையலை மாட்டிவிட்டார். இளைஞருக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவின.
இதைப் பார்த்தவர்கள் பலர் அந்த இளம்பெண்ணின் செயலை பாராட்டினர். ‘இது போன்ற நபர்களை பொதுவெளியில் அவமானப்பத்த வேண்டும்’ என்றும், ‘பெண்களிடம் அத்துமீறும் நபர்களுக்கு பொதுமக்கள் சேர்ந்து கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும்’ என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், ‘பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதா? மேக்கப் போட்டுவிடுவது எப்படி தண்டனையாகும்? ஒருவரை பொதுவெளியில் அவமானப்படுத்துவதை விட சட்டப்படி தண்டனை வழங்குவதே சரியானது’ என்றும் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.