அறுவை சிகிச்சையின்போது இளம்பெண் உயிரிழப்பு - 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு

உயிரிழந்த அனிஷா ராயின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறுவை சிகிச்சையின்போது இளம்பெண் உயிரிழப்பு - 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(வயது 24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.

இதன்படி நேற்று அனிஷா ராய்க்கு லேசர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால், நேற்றைய தினம் அனிஷா ராய்க்கு லேசர் சிகிச்சைக்கு பதிலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அனிஷா ராய் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த டாக்டர்கள், அனிஷாவின் குடும்பத்தினரிடம், உயர்சிகிச்சைக்காக அவரை லக்னோவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்குள் அனிஷா ராய் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

டாக்டர்களின் அலட்சியம் காரணமாகவே அனிஷா ராய் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனிஷாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அனிஷா ராயின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com