கேரள இளம்பெண் பெங்களூருவில் குத்திக்கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன் கைது

காட்டன் பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணாவை கைது செய்தனர்.

கேரள இளம்பெண் பெங்களூருவில் குத்திக்கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன் கைது
Published on: 

பெங்களூரு

பெங்களூருவிலுள்ள தங்கும் விடுதியில் கேரள இளம்பெண்ணை குத்திக்கொன்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்தவர் கங்கா (வயது 22). இவர் நர்சிங் படித்து முடித்து வேலை தேடி வந்தார். அதுபோல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணா (வயது 23). கங்காவும், கோகுல கிருஷ்ணாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கோகுல கிருஷ்ணா பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை கல்லூரிகளில் சேர்த்துவிடும் ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கங்காவும், கோகுல கிருஷ்ணாவும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். இருவரும் காட்டன்பேட்டையில் தர்கா அருகில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

வாக்குவாதம்

நேற்று காலை 10 மணிக்கு அவர்கள் அறையில் தங்கியிருந்த நேரம் முடிவடைய இருந்தது. அந்த சமயத்தில் கங்கா, கோகுல கிருஷ்ணா இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இருவர் இடையேயும் நீண்ட நேரமாக வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த கோகுல கிருஷ்ணா தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கங்காவை சரமாரியாக குத்தியுள்ளார்.

போலீசார் விசாரணை

இதில் பலத்த கத்திக்குத்து காயங்கள் அடைந்த கங்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தங்கும் விடுதி ஊழியர்கள் உடனே காட்டன் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேலை தேடி கங்காவை பெங்களூருவுக்கு கோகுல கிருஷ்ணா அழைத்து வந்ததும், அந்த சமயத்தில் இருவர் இடையேயும் தகராறு ஏற்பட்டதும், இதில் கோகுல கிருஷ்ணா கங்காவை கத்தியால் குத்தி கொன்றதும் தெரியவந்தது.

சந்தேகம்

ஆனால் கொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதையடுத்து கொலையான கங்கா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டன் பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோகுல கிருஷ்ணாவை கைது செய்தனர். கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், கங்கா வேறொரு வாலிபரை காதலித்து வந்ததாக எழுந்த சந்தேகத்தில் கோகுல கிருஷ்ணா அவரை கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

X