

திருப்பதி,
ஆந்திரா மாநிலம்,பல்நாடு மாவட்டம், கரம்புடி அடுத்த இன்பராஜு பள்ளியை சேர்ந்தவர் பால சைதுலு. சிலக்கலூரி பேட்டையை சேர்ந்தவர் ஷேக் ஹசீனா (வயது 24). இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படித்து வந்தனர். தேர்வு எழுத சென்றபோது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் தேர்வு முடிவில் பால் சைதுலு தோல்வி அடைந்து தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். சேக் ஹசீனா தேர்வில் வெற்றி பெற்றதால் சுல்லூர்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சேக் ஹசீனா வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்தார்.
இதனால் பால சைதுலு ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது. எனவே காதலியை தீர்த்துக் சுட்ட முடிவு செய்தார். சேக் ஹசீனா கடந்த 4-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தார். பால சைதுலு காதலிக்கு போன் செய்து உன்னை பார்க்க வேண்டும். உன்னிடம் பேச வேண்டும் என ஆசையாக இருக்கிறது என வார்த்தைகளை அள்ளி வீசினார். காதலனின் அழைப்பை ஏற்று வெளியே வந்தார். ஷேக் ஹசீனாவை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றார். அப்போது வேறு ஒரு ஆணுடன் பழகுவது குறித்து பால சைதுலு கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாலசைதுலு திட்டமிட்ட படி வாங்கி வந்த கத்தியை எடுத்து காதலியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் தனது பைக்கில் இருந்த பெட்ரோல் பிடித்து சேக் ஹசீனா மீது ஊற்றி எரித்தார். அடையாளம் தெரியாத அளவுக்கு 80 சதவீதம் உடல் எரிந்து கருகியது. பால சைதுலு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிலிருந்து வெளியே சென்ற மகள் இரவு வரை வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிலக்கலூரி பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.
அதில் ஷேக் ஹசீனாவின் செல்போன் கரம்புடி புறநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். உடல் முழுவதும் எரிந்து, சிதைந்து காணப்பட்டதால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். ஷேக் ஹசீனா உடன் கடைசியாக பால சைதுலு பேசியது தெரிய வந்தது. விசாரணையில் பால சைதுலு இளம்பெண்ணை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. போலீசார் பால சைதுலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.