காதலன் கைவிட்டதால் கல்லூரி நண்பனை திருமணம் செய்த இளம்பெண்


காதலன் கைவிட்டதால் கல்லூரி நண்பனை திருமணம் செய்த இளம்பெண்
x

வெளியூர் சென்று திருமணம் செய்துகொள்ள காதல் ஜோடி முடிவு செய்திருந்தது.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஷ்ரத்தா திவாரி. பட்டப்படிப்பு படித்துள்ள அவர், பெற்றோருடன் வசித்து வந்தார். ஷ்ரத்தா அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை அவர் காதலித்து வந்தார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஷ்ரத்தா தங்கள் பெற்றோரிடம் கூறிவந்தார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இதனால் பெற்றோரை உதறிவிட்டு காதலனை திருமணம் செய்வதற்காக இந்தூர் ரெயில்நிலையத்திற்கு சென்றார். வெளியூர் சென்று திருமணம் செய்துகொள்ள காதல் ஜோடி முடிவு செய்திருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் காதலன் வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிறகும் அவர் எடுக்கவேயில்லை.

ஒருகட்டத்தில் காதலன் ஷ்ரத்தாவுக்கு போன் செய்து, ‘எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை’ என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக காதலனை நம்பி பெற்றோரை கைவிட்டதால் ஷ்ரத்தா கடும் வேதனைக்கு உள்ளானார். ரெயில்நிலையத்தில் அமர்ந்து கதறி அழுதார். என்ன செய்வது என்று தெரியாமல் நீண்டநேரமாக அழுதுகொண்டே இருந்தார்.

வீட்டுக்கும் திரும்பி செல்ல முடியாது என்பதால் அந்த சமயத்தில் அங்கு வந்த ரெயிலில் ஏறி அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா கல்லூரியில் படித்தபோது நண்பராக இருந்த கரண் என்பவர் பயணம் செய்தார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் கரணிடம் தனது நிலைமையை பற்றி கூறினார்.

இறுதியாக கரண் ‘நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறினார். நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பனே மேல் என்று நினைத்த ஷ்ரத்தா சம்மதம் தெரிவித்தார். பின்னர் காதல் ஜோடி ரெயிலில் இருந்து இறங்கி சென்று, அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். போலீசார் பெண்ணின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஷ்ரத்தாவின் தந்தை, ‘நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். அதற்கு புதுமண தம்பதி சம்மதம் தெரிவித்தது. அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார். சினிமா போல் நடந்த இந்த திடீர் திருமணம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story