அரைகுறை ஆடையுடன் தெருவில் வலம் வந்த இளம்பெண்... அறிவுரை வழங்கிய பெண் காவலருக்கு அடி, உதை

ஆத்திரமடைந்த மோகினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கே.ஆர். புரம் ரெயில்வே நிலையம் பகுதியருகே கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த பகுதியில் தாமினி என்ற மோகினி (வயது 31) என்பவர் தெருவில் அரைகுறை ஆடையுடன் நடந்து சென்றார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவரை, குட்டையான ஆடையில் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
அவரை இளைஞர்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனால், எதனையும் கண்டு கொள்ளாமல் தெருவின் நடுவில் நடந்து கொண்டே சென்றார். அப்போது, போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர் அவரிடம் சென்று, இதுபோன்று ஆடைகளை அணிந்து தெருவில் நடந்து போக வேண்டாம் என கூறியதுடன், வாகனங்கள் வருகின்றன.
அதனால், சற்று ஓரத்தில் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், மோகினி அமைதியாக நின்றிருக்கிறார். இதனால், திரும்பவும் லட்சுமி அவரை தள்ளி செல்லும்படி கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அவருடைய முடியை பிடித்து, இழுத்து, கீழே தள்ளி கன்னத்தில் அறைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பிற்காக லட்சுமி வைத்திருந்த தடியை பறித்து, அவரை கடுமையாக தாக்கியும் இருக்கிறார். இதில் லட்சுமியின் முகம், மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றினர். தப்பியோடிய மோகினிக்கு எதிராக லட்சுமி அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய போலீசார் மோகினியை பிடித்து சிறையில் அடைத்தனர்.
அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. அவர் மாலத்தீவில் பள்ளி படிப்பையும், பெங்களூருவிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பையும் படித்து இருக்கிறேன் என போலீசாரிடம் விசாரணையின்போது கூறியுள்ளார். பெங்களூருவில் மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.






