

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நிதிஷா. இவரது வீட்டில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2 வைர மோதிரங்கள், ஒரு தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள் காணாமல் போனது. அந்த சமயத்தில் நிதிஷாவின் வீட்டில் விமலா தேவி என்ற இளம்பெண், பணியாளராக வேலை செய்து கொண்டிருந்தார்.
நிதிஷாவுக்கு முதலில் விமலா தேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இது குறித்து கேட்டபோது, தனக்கு நகையைப் பற்றி எதுவும் தெரியாது எனவும், வேண்டுமானால் இது குறித்து காவல்துறைக்கு நானே தகவல் தெரிவிக்கிறேன் என்றும் விமலா தேவி கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய நிதிஷா, இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்ததோடு, தனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
காவல்துறையிடம் புகார் அளித்து சுமார் ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும், நகை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 29-ந்தேதி, நிதிஷா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டு பணிப்பெண் விமலா தேவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த நிதிஷா, அவர் பதிவு செய்திருந்த ரீல்ஸ் வீடியோவை கவனித்தார்.
அந்த வீடியோவில் விமலா அணிந்திருந்த தங்க செயின், ஓராண்டுக்கு முன்பு காணாமல் போன தனது செயின் போலவே இருப்பதைக் கண்டு நிதிஷாவுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் விமலா தேவி வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் புகைப்படங்களிலும் அதே நகை இருந்துள்ளது.
இந்த ஆதாரத்தைக் கொண்டு நிதிஷா காவல்துறையிடம் மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 1-ந்தேதி வழக்குப்பதிவு செய்த ராஜ்பூர் போலீசார், விமலா தேவியை பிடித்து விசாரணை நடத்தியபோது, நகையை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியை சேர்ந்த விமலா தேவி, உத்தரகாண்ட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். அவர் நிதிஷாவின் வீட்டில் வேலை செய்யும்போது அங்கிருந்த நகைகளை அடிக்கடி கவனித்து வந்துள்ளார். ஒருநாள் தக்க சமயம் பார்த்து நகைகளை திருடிய அவர், தன் மீது சந்தேகம் வராத வகையில் அப்பாவி போல் நடித்து நாடமாடியுள்ளார்.
ஆரம்பத்தில் இதை நிதிஷாவும் நம்பிய நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவால் விமலா தேவி இறுதியில் சிக்கிக் கொண்டார். அவரிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருடப்பட்ட நகைகளை கைப்பற்றிய போலீசார், விமலா தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.