நைட் கிளப்பில் இளம்பெண்ணின் ஆடையை கழற்றி... அசாமில் கொடூரம்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது

அதன்பின்னரும், அவரை காலால் உதைத்தும், மிதித்தும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

நைட் கிளப்பில் இளம்பெண்ணின் ஆடையை கழற்றி... அசாமில் கொடூரம்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது
Published on: 

கவுகாத்தி

அசாமில் நைட் கிளப்பில் இளம்பெண்ணின் ஆடையை கழற்றி நடந்த கொடூர தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

அசாமில் கானாபாரா பகுதியில் மதுபான பாருடன் கூடிய உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இரவு நேர விடுதியின் கார் பார்க்கிங் செய்யும் தளத்தில் அதிகாலை 2 மணியளவில், இளம்பெண்ணின் ஆடையை கழற்றி கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இதில், அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்தும், ஆடைகளை பிடித்தும் தரதரவென இழுத்து, தரை தளத்திற்கு கொண்டு வந்து மீண்டும் அவரை தாக்கியுள்ளனர். இதில், அவர் ஏறக்குறைய சுய நினைவை இழந்த நிலைக்கு சென்றுள்ளார். அதன்பின்னரும், அவரை காலால் உதைத்தும், மிதித்தும் கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை மற்றொரு பெண் தூக்கி செல்லும் காட்சிகளும் உள்ளன.

3 பெண்கள்

இதுபற்றி திஸ்பூர் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பாரில் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. அவர்களில் சில குற்றவாளிகள் பாரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, பெண்ணின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com