

புதுடெல்லி
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெற்றது. கடந்த 19-ந்தேதி டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.
இதில், பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்சும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதுதவிர, வர்த்தக தலைவர்கள், தொழிலதிபர்கள், ஏ.ஐ. நிபுணர்கள் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 20-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சியின்போது, இளைஞர் காங்கிரசார் திடீரென அரங்கிற்குள் நுழைந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
இதுதொடர்பாக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு சிப் என்பவரிடம் நேற்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் மொத்தம் 8 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
கட்சியில், ஒருங்கிணைப்பாளர் உள்பட முக்கிய பொறுப்பில் உள்ள ஜிதேந்திர யாதவ், ராஜா குஜார் மற்றும் விமல் அஜய் குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேர் அதற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து, கியூ ஆர் கோடுகளை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். வழக்கம்போல் ஆடை அணிந்தபடி உள்ளே சென்றனர். இதன்பின்னர் மேலாடையை அகற்றி விட்டு, அரசியல் வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்தபடி, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர. அப்போது பிரதமருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர் என போலீசார் தெரிவித்தனர்.