‘இந்திய இளைஞர்களே, தொடர்ந்து போராடுங்கள்; நாங்கள் துணை நிற்கிறோம்’ - ராகுல் காந்தி

தேவையான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே தங்களுக்கு கிடைத்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘இந்திய இளைஞர்களே, தொடர்ந்து போராடுங்கள்; நாங்கள் துணை நிற்கிறோம்’ - ராகுல் காந்தி
Published on: 

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜந்தர் மந்தர்

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனை முன்னிட்டு வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். ஜந்தர் மந்தர் நோக்கி செல்ல முயன்ற இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காவல்துறை வாகனங்களில் அழைத்து சென்றனர்.

தடுப்புக் காவல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே டெல்லிக்கு வந்திறங்கிய விமானத்திலேயே காவல்துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். அதே போல், மாணவர் சங்க தலைவர் நேஹா போரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் போலீசாரால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், இந்திய இளைஞர்களுக்கு துணை நிற்பதாகவும், அவர்கள் போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

கோழைத்தனம்

“நான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந்திர மோடியை எதிர்த்து போராடி வருகிறேன். அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் அடிப்படை குணம் கோழைத்தனம்.

இந்த கதையின் வில்லன்களான நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் மற்றும் அஜித் தோவல் ஆகியோர், தங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அரண் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வருவதை உணர்கிறார்கள்.

பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். காவல்துறையினரை வரவழையுங்கள்: 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் என நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் போலீசாரை வரவழைத்து அனைத்து தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்.

தகவல்கள் கிடைத்துவிட்டன

நாங்கள் உங்களை சூழ்ந்து விட்டோம். இனி நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நான் சொல்வதை குறித்துக் கொள்ளுங்கள்: எங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே எங்களுக்கு கிடைத்துவிட்டன.

நாங்கள் நமது அரசியலமைப்பை பாதுகாக்கப் போகிறோம். இந்திய மக்களின் குரலை பாதுகாக்கப் போகிறோம். கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், இனி ஒருபோதும் மீண்டும் நிகழாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

தொடர்ந்து போராடுங்கள்

இந்திய இளைஞர்களே, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம். இந்த ஆட்சியும், நமது அரசியலமைப்பைத் தாக்கியவர்களும் தோற்கடிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com