

கான்பூர்
உத்தர பிரதேசத்தில், அரசு வேலை கிடைக்காத விரக்தியில், பி.டெக்கில் தங்க பதக்கம் பெற்ற வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கோவிந்த நகரில் வசித்து வந்தவர் ஆனந்த் குமார் (வயது 23). 2024-ம் ஆண்டு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படிப்பில் தங்க பதக்கம் பெற்றதுடன், உத்தர பிரதேச மாநில அளவில் 3-வது ரேங்க் பெற்றிருக்கிறார்.
கல்லூரி விழா ஒன்றில் உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேலிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். இந்நிலையில், அவருடைய குடும்பத்தினர் மூத்த சகோதரரின் திருமண வேலையாக பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
அப்போது, 3 அடுக்குமாடிகளை கொண்ட வீட்டில் தனியாக இருந்த ஆனந்த், தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த அறையில் தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்தது.
அதில், அவருடைய தந்தையை குறிப்பிட்டு, 50-க்கும் மேற்பட்ட முறை அரசு வேலைக்காக முயன்றும் அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. தயவு செய்து மன்னித்து விடுங்கள் என தெரிவித்து உள்ளார்.
ஆனந்தின் தந்தை ராஜ்குமார் கூறும்போது, ரெயில்வே, வங்கி, கல்வி துறை உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய தேர்வுகளில் கலந்து கொண்டான். ஆனால், அவற்றில் வெற்றி பெறவில்லை. இதனால், பல மாதங்களாக கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டான் என்று கதறி அழுதபடியே கூறினார். அரசு வேலை கிடைக்காத விரக்தியில், கவர்னரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்ற வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.