

ஹாப்பூர்
உத்தர பிரதேசத்தில் ஆம்புலன்சுகள் காத்திருந்தபோது, காரின் மேல் இளைஞர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாபுகர் பகுதியின் பச்ரவுதா கிராமத்தில், இரண்டு சொகுசு கார்களில் இளைஞர்கள் ஒரு குழுவாக சென்றனர். அவர்கள் சாலையில் செல்லும் வழியை மறித்துக்கொண்டு அவர்களுடைய கார்களை நிறுத்தி இருந்தனர்.
அவர்கள் கார்களின் கூரையின் மீது ஏறிக்கொண்டு நடனமாடியபடியும், பாட்டு பாடியபடியும் இருந்தனர். அப்போது அந்த வழியே இரண்டு ஆம்புலன்சுகள் வந்தன. சைரன்களை ஒலித்தபடி இரண்டு ஆம்புலன்சுகள் நீண்ட நேரம் நின்றிருந்தன. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனினும், அந்த வாகனங்களில் இருந்தவர்கள் வழிவிட மறுக்கின்றனர். தொடர்ந்து நடனம் ஆடியபடியே காணப்பட்டனர். ஆம்புலன்சுகளில் ஒன்று ஒரு நோயாளியை ஏற்றிச்சென்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களின் அலட்சியம், அத்துமீறலை கடுமையாக கண்டித்துள்ளனர்.