

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை நள்ளிரவில் திருடிச் சென்ற 3 இளைஞர்கள், அந்த வாகனம் சேற்றில் சிக்கியதால் அதை அங்கேயே கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு - கொயிலாண்டி வழித்தடத்தில் இயங்கும் 'செனோ' என்ற தனியார் பேருந்து, கடந்த திங்கட்கிழமை இரவு வழக்கம் போல் பயணங்களை முடித்துவிட்டு கொயிலாண்டி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அங்கு வந்த 3 இளைஞர்கள், யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த பேருந்தை திருடி ஓட்டிச் சென்றுள்ளனர்.
பேருந்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற நிலையில், பொயில்காவு பகுதி பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு திருப்ப முயன்றுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்திலிருந்த ஆழமான சேற்றில் இறங்கி, அருகில் இருந்த ஒரு வீட்டின் மதில் சுவரில் பலத்த சத்தத்துடன் சாய்ந்து நின்றது.
பேருந்தை சேற்றிலிருந்து மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இளைஞர்கள் பேருந்தை அங்கேயே கைவிட்டனர். எனினும், பேருந்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த அன்றைய பயண வசூல் பணத்தை அவர்கள் திருடிக்கொண்டு தப்பியோடினர்.
மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் பேருந்து ஆபத்தான முறையில் சாய்ந்து கிடப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், பேருந்து உரிமையாளர் சலாஹுதீன் மற்றும் கொயிலாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர், 2 பெரிய கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பேருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கொயிலாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஏ. கிரண் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், பந்தலாயினி பகுதியைச் சேர்ந்த அபினவ் (வயது 21) என்ற இளைஞரை முதன்மைக் குற்றவாளியாகக் கண்டறிந்து கைது செய்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற 2 இளைஞர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.