தெலுங்கானா முதல்-மந்திரிக்கு ஒரு ஜோடி ஷூ பரிசளித்து சவால் விட்ட ஒய்.எஸ். சர்மிளா

தெலுங்கானா முதல்-மந்திரிக்கு ஒரு ஜோடி ஷூவை பரிசாக அளித்து, என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொள்ள வாருங்கள் என ஒய்.எஸ். சர்மிளா ரெட்டி சவால் விட்டு உள்ளார்.
தெலுங்கானா முதல்-மந்திரிக்கு ஒரு ஜோடி ஷூ பரிசளித்து சவால் விட்ட ஒய்.எஸ். சர்மிளா
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) அரசுக்கு எதிராக அவ்வப்போது அவர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கடந்த நவம்பர் மாதம் இறுதியில், சந்திரசேகர் ராவின் இல்லம் முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி, காரில் புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி அறிந்த போலீசார் காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, அவரை வழிமறித்து கிரேன் கொண்டு காரை தூக்கி சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சர்மிளா சிறை வைக்கப்பட்டார். தனது மகளை பார்ப்பதற்காக புறப்பட்ட சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மாவும் தெலுங்கானா போலீசாரால் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டார்.

இதன்பின், என்னை பார்த்து தெலுங்கானா முதல்-மந்திரி பயந்து விட்டார் என சர்மிளா கூறினார். எனது பாதயாத்திரை நடக்க கூடாது என்று கே.சி.ஆரே முன்னின்று இதனை செய்து வருகிறார். போலீசாரை அவர் பயன்படுத்துகிறார். காவல் துறையின் தோளில் நின்று தாக்குதல் நடத்துகிறார் என சர்மிளா கூறினார்.

இதன்பின், தனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து 3-வது நாளாக நடந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அவர் மயக்கமடைந்து போனார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், நிறுத்தப்பட்ட தனது பாதயாத்திரை நரசம்பேட்டையில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும் என சர்மிளா கூறினார். இந்த ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதற்காக பாதயாத்திரையை அவர் தொடங்கியுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, தெலுங்கானா முதல்-மந்திரி கே.சி.ஆருக்கு நான் இன்று சவால் விடுக்கிறேன். அவர் என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டு நடக்கட்டும்.

நாங்கள் இதற்காக அவருக்கு ஒரு ஜோடி ஷூ பரிசாக தருகிறோம். அவர் கூறுவதுபோன்று, இது மாநிலத்தின் பொற்காலம் என்றால், மக்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்றால், அவர் கூறுவது போல், என்னுடைய மக்கள் வறுமையில் சிக்கி இருக்கவில்லை என்றால், அவரிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுகிறேன்

ஆனால், அது உண்மை இல்லை என்றால், கே.சி.ஆர். பதவி விலக வேண்டும். மக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். அவர் வாக்குறுதி அளித்ததுபோன்று தலித் ஒருவரை முதல்-மந்திரியாக உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தெலுங்கானா சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படும் மாநில பட்ஜெட்டில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும் ஒய்.எஸ். சர்மிளா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com