காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு எதிராக குற்றப்பத்திரிகை-சி.பி.ஐ. தாக்கல்

சத்யபால் மாலிக் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்,
கிரு நீர் மின் திட்ட ஊழல் வழக்கில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் சத்யபால் மாலிக், அவரின் இரு உதவியாளர்களான வீரேந்தர் ராணா, கன்வர் சிங் ராணா உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை சத்யபால் மாலிக் கவர்னராக பதவி வகித்தார். அப்போது ரூ.2,200 கோடி மதிப்பிலான கிரு நீர் மின் திட்ட கட்டுமானப் பணிக்கன ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைப்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், தனியார் நிறுவன முன்னாள் தலைவர் நவீன்குமார் சவுத்திரி, பிற அதிகாரிகளான பாபு, மிட்டல், மிஸ்ரா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2022- ஆம் ஆண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்து சிபிஐ, சத்யபால் மாலிக்குக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வழக்கில் தொடர்புடைய பிறருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை நடத்தியது. இந்த நிலையில், இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் உள்பட 8 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






