காங்கிரசுடன் கூட்டணியா..? சோனியாகாந்தியுடன் ஒய்.எஸ். சர்மிளா சந்திப்பு

தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் சோனியாகாந்தியுடன் ஒய்.எஸ். சர்மிளா ஆலோசனை நடத்தினார்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.

பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த சூழலில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

கூட்டத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பைக்கு படையெடுத்து வருகிறார்கள். ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நேற்று முன்தினமே மும்பை வந்துவிட்டனர்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று மாலை மும்பை வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இன்னும் சில தலைவர்களும் நேற்று இரவில் மும்பை வந்து சேர்ந்தனர்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் வர உள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கானாவின் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சித் தவைவரான ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரசுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். சர்மிளா இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தேன். மிகவும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். தெலுங்கானா முதல்-மந்திரி கே.சி.ஆரின் (சந்திரசேகர ராவ்) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது" என்று அவர் கூறினார். 

தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளநிலையில் சோனியாகாந்தியுடன் ஒய்.எஸ். சர்மிளா ஆலோசனை நடத்தியது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com