யுவராஜ் சிங்கின் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம்பெண் கைது

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
யுவராஜ் சிங்கின் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம்பெண் கைது
Published on

புதுடெல்லி

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். இவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம் பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.

யுவராஜ் சிங்கின் தம்பி ஜோராவர் சிங் கடந்த 10 ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். இவரை கவனித்துக் கொள்வதற்காக 2022 ஆம் ஆண்டு காப்பாளராக ஹேமா கவுசிக் என்ற பெண் பணியமர்த்தப்பட்டார்.

ஹேமா வேலையில் திருப்தி ஏற்படாததால் யுவராஜ் சிங்கின் தாய் ஷப்னம் சிங் அவரை வேலையில் இருந்து நீக்கி உள்ளார். இதனால் மனமுடைந்த ஹேமா கவுசிக் ஷப்னம் சிங்கை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளார்.

இதை தொடர்ந்து யுவராஜின் குடும்பத்தை பழிவாங்க ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் குடும்பத்தின் மீது பொய் வழக்கு போடுவேன் என்று ஷப்னத்தை மிரட்டி உள்ளார்.

மே 2023 இல் ஹேமா கவுசிக் வாட்ஸ்அப் மூலம் யுவராஜ் சிங் தாயாரை தொடர்பு கொண்டு பணம் கிடைக்காவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பொய் வழக்கில் சிக்க வைப்பேன் என மிரட்டியுள்ளார்.

ஜூலை 19 ந்தேதியும் இது போல் மெசெஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்து போன ஷப்னம், பணம் கொடுக்க ஹேமாவிடம் அவகாசம் கேட்டுள்ளார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில், ஹேமாவுக்கு முன்பணமாக ரூ.5 லட்சம் தருவதாக கூறி ஹேமாவை வரவழைக்க போலீசார் திட்டம் போட்டு உள்ளனர். போலீசார் திட்டப்படி ஹேமா கவுசிக் நேற்று ரூ.5 லட்சத்தை வாங்க வந்தபோது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஹேமா கவுசிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com