

பெங்களூரு,
வடகர்நாடகத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவர் பெங்களூருவில் தங்கி படித்து வருகிறார். பசவராஜ் தனது படிப்பு செலவுக்காக விற்பனை பிரதிநிதியாக பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பசவராஜ் சம்பவத்தன்று அதிகாலை 4.40 மணி அளவில் எலகங்கா நியூ டவுன் 4-வது ஸ்டேஜ் பகுதியில் பொருளை டெலிவரி செய்துவிட்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ் நகர் அருகே சென்றபோது சில பெண்கள் அவரை இந்தியில் திட்டியதாக தெரிகிறது.
இந்தி தெரியாததால் பசவராஜிக்கு புரியவில்லை. இதனால் பசவராஜ் அந்த பெண்களிடம் சென்று தனக்கு இந்தி தெரியாது, கன்னடத்தில் சொல்லும்படி கூறி உள்ளார். அதற்கு அவர்கள் இந்தியில் பேசும்படி கூறி திட்டி அவமானப்படுத்தி உள்ளனர். மேலும் இளம்பெண்கள் பசவராஜின் தொப்பியை கழற்றி சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ், 112 அவசர எண்ணுக் கும், நண்பர் அசோக் என்பவருக்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த பெண்கள், தங்கள் நண்பர்கள் 2 பேரை வரவழைத்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பசவராஜை தாக்கினார்கள். மேலும் அங்கு வந்த பசவராஜின் நண்பர் அசோக்கையும் தாக்கி உள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து போராடி தப்பிய பசவராஜ் மற்றும் அசோக் ஆகியோர், எலகங்கா நியூ டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள். பசவராஜை தாக்கிய சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த கன்னட அமைப்பினர் கொந்தளித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்கள், கர்நாடகத்தில் கன்னடர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும், கன்னடரை தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.