

திருவனந்தபுரம்,
கேரளாவில் சமீப நாட்களாக ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கொசுக்களின் வழியே பரவ கூடிய இந்த தொற்றுக்கு கேரளா அதிக இலக்காகி உள்ளது. இந்நிலையில், கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் இன்று கூறியுள்ளார்.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் நோயாளியும், அடுத்த 13 சுகாதார ஊழியர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள்.
அனயாராவின் 3 கி.மீ. சுற்றளவு பகுதியில் அதிக அளவில் ஜிகா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் கொசுக்கள் பரவாமல் தடுக்க இப்பகுதியில் உள்ள கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஜிகா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஜிகா வைரசுக்கு எதிராக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகிலேயே கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெற்று பரவும் வகையில் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.