அமித்ஷா உடன் நடிகர் ரிஷப் ஷெட்டி சந்திப்பு

தனது நடிப்பில் வெளியாக உள்ள புதிய படங்கள் குறித்து அமித்ஷாவுடன் விவாதித்ததாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
அமித்ஷா உடன் நடிகர் ரிஷப் ஷெட்டி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

கன்னட திரையுலகம் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில், அவரது நடிப்பில் வெளியான காந்தாரா திரைப்படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்தி இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'ஜெய் ஹனுமான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் அனுமன் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரியில் பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

'காந்தாரா 2' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி, ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிப்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென டெல்லி சென்ற ரிஷப் ஷெட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மத்திய மந்திரி அமித் ஷாவைச் சந்தித்தது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், உள்துறை மந்திரி அமித் ஷாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'காந்தாரா' மற்றும் 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களைப் பாராட்டி அவர் பேசிய தருணம், என் வாழ்வின் மறக்க முடியாததாக அமைந்தது.

அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடியதும் அற்புதமான அனுபவமாக இருந்தது. நமது வரலாறு, கலாசாரம், கலை மற்றும் திரைப்படத் தயாரிப்பு குறித்து அவரிடம் பேசியபோது, நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com