

பெரும்பாவூர்,
கொச்சி அருகே ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் மாவட்டம், மட்டாஞ்சேரி-சேராநல்லூர் இடையே ஒரு தனியார் பஸ் ஓடுகிறது. இந்த பஸ்சில் எர்ணாகுளம் அய்யப்பன் காவு பகுதியை சேர்ந்த அலன் (வயது 18) என்பவர் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த பஸ்சில் தினமும் பள்ளிக்கூடத்துக்கு 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பயணம் செய்தார்.
15 வயதான அந்த மாணவியிடம் கண்டக்டர் அலன், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை அந்த மாணவி கண்டித்தும், தொடர்ந்து இது போன்ற செயல்களில் அலன் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை கையை பிடித்து இழுத்து அவதூறாக பேசினார். இது குறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து பஸ் கண்டக்டர் அலனை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.