சபரிமலை கோவில் அருகே ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்; விமானி மீது போலீசார் வழக்கு

பொதுப் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ஹெலிகாப்டரை இயக்கியதாக விமானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில் அருகே ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்; 
விமானி மீது போலீசார் வழக்கு
Published on

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி அதி பாதுகாப்பு மிகுந்த இடமாகும்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் மதியம் சபரிமலை கோவிலின் அருகே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 4 முறை கோவிலை வட்டமிட்டு பறந்த இந்த ஹெலிகாப்டர் கடலோர காவல்படைக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சபரிமலை சிறப்பு ஆணையர் கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீஜித்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில் காலநிலை மோசமாக இருந்ததால் ஹெலிகாப்டர் திசைமாறி சபரிமலை கோவில் அருகே சென்றதாக கடலோர காவல்படை தெரிவித்தது. இது தொடர்பாக பம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சூழலில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி விசாரணை நடத்திய கூடுதல் டி.ஜி.பி. ஸ்ரீஜித், சபரிமலை சன்னிதானம் கோவிலின் மீது அனுமதியின்றி கடலோர காவல்படை ஹெலிகாப்டர் பறந்தது பெரும் தவறு என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது என்ற கடலோர காவல்படையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், இது ஒரு ஆபத்தான செயல் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கை சபரிமலை சிறப்பு ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பொதுப் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ஹெலிகாப்டரை இயக்கியதாக விமானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டவுடன், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், வழக்கின் விசாரணை அதிகாரியாக பத்தனம் திட்டா போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com