தூய பெட்ரோல் உங்கள் தந்தை வீட்டில் இருந்தா வரும்? இ20 விவகாரத்தில் பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை

பிரேசில் நாட்டில் 100 சதவீத எத்தனால் பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்படுகிறது. அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று பாஜக எம்பி கூறினார்.
 பாஜக எம்பி
Published on

ரேவா,

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் இ20 திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை விமர்சித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜனார்தன் மிஸ்ரா கூறியதாவது; “சுத்தமான பெட்ரோல் வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். சுத்தமான பெட்ரோல் உங்கள் தந்தை வீட்டில் இருந்து வருமா? நாட்டில் சுத்தமான பெட்ரோல் இல்லை என்றால் அது எங்கிருந்து கிடைக்கும்? இந்தியா தனது தேவையில் சுமார் 20 சதவீத எண்ணெயை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது என்றும், மீதமுள்ள 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

ஈரான்-அமெரிக்கா மோதல்

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. பிரேசில் நாட்டில் 100 சதவீத எத்தனால் பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்படுகிறது. அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களும் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டவை. வாகன உற்பத்தியாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர். ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூடுதலாக சுமார் 18 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று எண்ணெய் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.

இ20 பெட்ரோல்

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது. மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல். பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.

அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இ20 பெட்ரோல் விற்பனை இந்தியாவில் தொடங்கியது. ஆனால் இ20 பெட்ரோலால் கார்கள் பழுது அடைவதாக இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com