

புதுடெல்லி,
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவராக ராகவ் சத்தா நியமிக்கப்பட்டு இருந்தார்.
நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்கும் சத்தா. பொது பிரச்சினைகள் குறித்து வீரியமாக பேசி மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். இதனால் ஆம் ஆத்மி மட்டுமின்றி அனைத்து கட்சிகளிலும் மதிப்பை பெற்று இருந்தார்.
சமீப காலமாக இவருக்கும், கட்சித்தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் அவரை கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் நீக்கினார். மேலும் விவாதங்களிலும் அவர் பங்கேற்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இதனால் கட்சித்தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த அவர், நேற்று ஆம் ஆத்மியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் மேலும் 6 எம்.பி.க்களும் தன்னுடன் விலகுவதாக தெரிவித்தார்.
அதன்படி ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுவாதி மலிவால், ராஜிந்தர் குப்தா, விக்ரம் சானி ஆகிய 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மியில் இருந்து திடீரென விலகினர்.
பஞ்சாப்பை சேர்ந்த அவர்கள் அனைவரும் பின்னர் பா.ஜனதாவில் இணைந்தனர். மாலையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
இந்த நிலையில், ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.,க்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 106 இல் இருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கிரண் ரிஜிஜு தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இவர்கள் 7 பேரும் ஒருபோதும் நாடாளுமன்ற மரபுகளுக்குப் புறம்பான நடத்தைகளில் ஈடுபட்டதில்லை, இழிவான சொற்களைப் பயன்படுத்தியதில்லை. பிரதமர் மோடியின் தொலைநோக்குமிக்க தலைமையின்கீழ் நாட்டைக் கட்டமைக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேற்கிறோம். பிளவுவாத இந்தியா கூட்டணிக்கு விடைகொடுக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.,க்கள் இருக்கும் நிலையில், மூன்றில் இரு பங்கு எம்.பி.,க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆகையால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சியால் தகுதிநீக்க நடவடிக்கை கோர முடியாது என்று கூறப்படுகிறது.