மத்திய கிழக்கில் போர் பதற்றம்: மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

5 மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
Published on

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கப்பால் போக்குவரத்து தடைபட்டு, சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த போரின் எதிரொலியாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாட உள்ளார்.

அதே சமயம் தமிழ்நாடு, கேரளா உள்பட தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளதால், அந்த 5 மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com