குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த 108 ஆம்புலன்சின் பணியாளர்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அறையில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தங்கி சேவை செய்து வருகின்றனர். இந்த அறையில் மருந்து பொருட்களையும் வைத்துள்ளனர். இந்தநிலையில் அந்த அறையை காலி செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் கடந்த சில மாதங்களாக கூறி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல வருவாய்த்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் குளித்தலை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த் வருவாய்த்துறை அதிகாரிகளிடம், சில நாட்களுக்கு முன் பேசியதாகவும், இதற்கு ஒரு வாரம் கால அவகாசம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த குளித்தலை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், ஆம்புலன்ஸ் பணியாளர்களான டெக்னீசியன் ரம்யாவிடமும், டிரைவர் சுரேஷிடமும் உடனடியாக அவர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்யுமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாமதம்
அதற்கு அவர்கள் அறையை காலிசெய்ய எழுத்துப்பூர்வமான கடிதம் வழங்க வேண்டுமென கேட்டுள்ளனர். அறையை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையெனில் காவல்துறையினரை அழைத்து நடவடிக்கை எடுப்பேன் என உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் தெரிவித்துள்ளார். அந்தநேரத்தில் குளித்தலை பெரியார் நகரில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமெனவும் தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் பணியாளர்கள் செல்ல முற்பட்டபோது அவர்களை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் தடுத்து உடனடியாக அறையை காலி செய்துவிட்டு பின்னர் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்று தெரிவித்ததாகவும், காலி செய்யவில்லை எனில் அந்த அறைக்கு பூட்டு போடப்படும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் அங்கிருந்து செல்ல சுமார் 20 நிமிடங்கள் கால தாமதம் ஆகியுள்ளது.
சாவு
பின்னர் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டவரை அழைத்து வர சென்றபோது அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் தகவல் தெரிவித்தும், தாமதமாக ஏன் வந்தீர்கள் என்று ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் கேட்டுள்ளனர். நடந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்களின் மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.