ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலத்தில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பாபநாசம், குற்றாலத்தில் குவிந்த மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குற்றாலத்தில் குவிந்த மக்கள்
Published on

விக்கிரமசிங்கபுரம்,

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இந்துக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். இதன் மூலம் அவர்களின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசை நாளான நேற்று மக்கள் அதிகாலையில் எழுந்து ஆறு, குளங்களில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் புனித நீராடினால் தங்களுடைய பாவங்கள் தீரும் என்ற ஐதீகம் அடிப்படையிலும், அதிலும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபாடு செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

அதன்படி நேற்று அதிகாலையில் பாபநாசம் படித்துறையில் மக்கள் குவிந்தனர். அங்கு கோவில் முன்பாக ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, ஆற்றங்கரை படித்துறையில் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களின் வசதிக்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மற்றும் பாபநாசத்தில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளையொட்டி பாபநாசத்தில் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பாபநாசத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதே போல் குற்றாலம் மெயின் அருவிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று காலையில் இருந்து ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் அருவியில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com