

திருச்சி,
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று லால்குடி தொகுதிக்கு உட்பட்ட கல்லக்குடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் தான் நான் வளர்ந்தேன். 2011-வது ஆண்டு நடந்த தேர்தலிலேயே நான் திருச்சி தொகுதியில் தனியாக போட்டியிட்டேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளிடம் 'சீட்' கேட்டும் ஒதுக்கப்படவில்லை. எனவே லால்குடி, திருச்சி கிழக்கு, திரு வெறும்பூர், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகி றோம்' என்றார்.
இந்நிலையில் திடீரென அவர் கல்லக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ரெயில் தண்டவாளத் தில் தலை வைத்து படுத்தார். அதேபோல் நானும் இன்று (நேற்று) தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
இந்த தொகுதியில் உள்ள மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நான் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளேன். தொடர்ந்து 10 முறை, 5 முறை வென்று பதவியில் இருப்பவர்களால் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
இவை எல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்போம்' என்று கூறினார். நடிகர் மன்சூர்அலிகான் தலை வைத்து படுத்தது குறித்து அறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய்குமார் தலைமையிலான போலீசார் கல்லக்குடி ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மன்சூர் அலிகான் மீது ரெயில்வே இடத்துக்குள் அத்துமீறி நுழைதல், இடையூறு ஏற்படுத்தி, அநாகரீகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.