10 லட்சம் பேர்.. அறுசுவை உணவு... நாடே திரும்பி பார்க்கும் வகையில் திமுக மாநில மாநாடு

திருச்சி மாநாடுதான் மெயின் பிக்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
10 லட்சம் பேர்.. அறுசுவை உணவு... நாடே திரும்பி பார்க்கும் வகையில் திமுக மாநில மாநாடு
Published on

திருச்சி,

2026 சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் என தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாடுகள் ஒவ்வொன்றிலும் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் தொடங்கி, வெல்லும் தமிழ்ப்பெண்கள் வீடு வீடான பரப்புரை வரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை எல்லாம் வெறும் டிரெய்லர் தான் நாளை (9-ம் தேதி) திருச்சியில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் கூடும் மாபெரும் மாநாடு தான் மெயின் பிக்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு மேற்பார்வையில் திருச்சி சிறுகனூரில் மாநாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாபெரும் மாநாடு சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. அதோடு வாகன நிறுத்துமிடங்கள் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 40,000 முதல் 50,000 பேருந்துகளை நிறுத்தும் வகையில் விரிவான வாகனநிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன எல்.இ.டி. திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைப்பு, 110 அடி உயரக் கொடிக்கம்பம், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் அறுசுவையான சைவ மற்றும் அசைவ உணவு ஏற்பாடுகள், 10 லட்சம் நிர்வாகிகளும் அமர்வதற்குப் போதிய இருக்கைகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் என நாடே திரும்பி பார்க்கும் வகையில் மிக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கழக நிர்வாகிக்கும் தனித்தனியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது செய்தியுடன் கூடிய அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி மாநாட்டிற்கான முன்னேற்பாடுககள் குறித்து கலந்தாலோசித்து மாவட்டங்கள் வாரியாக மாநாட்டிற்கு வரும் வாகனங்களின் விவரங்கள் திரட்டப்பட்டு உள்ளன.

மிகப் பிரமாண்டமான முறையில் தயாராகும் திமுக மாநில மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் அதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இம்மாநாடு இருக்கும் என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com