ரூ. 10 ஆயிரம் கருணைத் தொகை அல்ல; உதவித் தொகை: கடும் எதிர்ப்பால் பெயரை மாற்றிய அதிமுக

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
ரூ. 10 ஆயிரம் கருணைத் தொகை அல்ல; உதவித் தொகை: கடும் எதிர்ப்பால் பெயரை மாற்றிய அதிமுக
Published on

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.இதையொட்டி எடப்பாடி கே. பழனிசாமி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்ட இந்த தேர்தல் வாக்குறுதிகளில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளும் அதில் இடம்பெற்றிருந்தன

இந்த நிலையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் தலைமைக் கழகத்தில் நிருபர்களை சந்தித்த அவர், 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது.எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கருணைத்தொகை என்ற பெயரில் வெளியிட்ட இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவித்தொகையை இழிவு செய்வது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதனையடுத்து, கருணைத்தொகை என்பதை மாற்றி உதவித்தொகை என்ற பெயரில் அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com