25 தொகுதியா?.. 35 தொகுதியா?.. பரபரப்பான சூழலில்.. தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
25 தொகுதியா?.. 35 தொகுதியா?.. பரபரப்பான சூழலில்.. தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஆட்சியில் பங்கு

இந்த குழுவின் தலைவர் கிரிஷ் சோடங்கர், ஆட்சியில் அதிகாரம் வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்தை வழிமொழியும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி சரிவராது என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரம் கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பெற்றுவிட வேண்டும் என்பதில் கிரிஷ் சோடங்கர் விடாபிடியாக உள்ளார்.

தொகுதி பங்கீடு இழுபறி

தி.மு.க.வுடன் நேரடி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றாலும் மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகளும், 2 மாநிலங்களவை எம்.பி. பதவியும் வழங்க வேண்டும் என்று கிரிஷ் சோடங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், சமீபத்தில் கனிமொழி எம்.பி.யை சந்தித்த போதும், இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

25 தொகுதியா? 35 தொகுதியா?

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் கொடுக்கலாம். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இசைவு தெரிவித்தால் உடனடியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மேற்கொண்டு விடலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் கிரிஷ் சோடங்கர், 35 தொகுதிகள் வேண்டும் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதுதான் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த பேச்சுவார்த்தை இன்றுடன் எளிதாக முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்

அதே நேரத்தில் தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5-ந் தேதி கடைசி நாள். எனவே, அதற்குள் தி.மு.க. - காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுக முடிவு எட்டப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com