

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறப்போகிறது என்பது முடிவாகவில்லை என்றாலும், 234 தொகுதிகளுக்குமே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வாங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது. உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வரவேண்டாம். ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளலாம் என்று தவெக தலைமை அறிவித்தது.
இந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க, வரும் 20-ந் தேதி (நாளை மறுநாள்) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை, பனையூர் அலுவலகம் வந்து நேரில் 10 ஆயிரம் பேரும், ஆன்லைன் வழியாக 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 50 ஆயிரம் பேர் தவெகவில் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்.
இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். ஆனால், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, திரும்ப ஒப்படைக்கும்போது பொதுப் பிரிவினர் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், தவெக அலுவலகத்திற்கு திரும்பி வந்த மனுக்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரம்தான் என்று கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில், அதற்குள் விருப்ப மனுக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு உயருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சித் தலைமையும் காரணம் புரியாமல் அதிர்ச்சியில் உள்ளது.